எதிர்தரப்பினரை போட்டுத்தள்ள ‘ஸ்கெட்ச்’: கூலிப்படையுடன் பெண் தாதா கைது

* கண்மாய்க்குள் சுற்றிவளைத்து பிடித்தனர்

* கஞ்சா, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

* திருப்புவனம் அருகே பரபரப்பு

திருப்புவனம்: திருப்புவனம் அருகே கூலிப்படையுடன் பெண் தாதா கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சா, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மேலராங்கியத்தை சேர்ந்த பிரபல ரவுடி லோடு முருகன். இவருக்கும் விருதுநகர் மாவட்டம், கட்டனூரை சேர்ந்த ஒரு தரப்புக்கும் முன்விரோதம் உள்ளது. தற்போது லோடு முருகன் சிறையில் உள்ளார். கட்டனூர் தரப்பினரை கொலை செய்ய லோடு முருகனின் மனைவியும், பெண் தாதாவுமான காளீஸ்வரி திட்டமிட்டு வந்தார். இதற்காக கூலிப்படையை தயார் செய்து மாங்குடி புதுக்குளம் கண்மாய்க்குள் பதுங்கி இருக்க செய்தார்.

இந்த கும்பல் தங்களுக்கு தேவையான பணம், வாகனம் ஆகியவற்றை அப்பகுதி மக்களை மிரட்டி பறித்து வந்துள்ளது. மேலும் சவடு மண் குவாரிகளில் ஆயுதங்களுடன் மிரட்டி பணம் பறித்தது. இதுகுறித்து போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மானாமதுரை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து நேற்று கண்மாய்க்குள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் திருப்பாச்சேத்தி ஆவரங்காட்டை சேர்ந்த குட்ட முருகன் (38), அஜய்தேவன் (20), வேம்பத்தூரை சேர்ந்த முகிலன் (22), காளையார்கோவிலை சேர்ந்த காளீஸ்வரன் (20), மதுரை திருநகரை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (32), திருநகர் சவுராஷ்டிரா காலனியை சேர்ந்த விக்னேஸ்வரன் (19), பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்த நவீன் நாகராஜ் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சா, 2 வீச்சரிவாள், 7 வாள்கள், ஒரு சூரி கத்தி, 8 டூவீலர்கள், 6 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் பிறகு மேலராங்கியத்திற்கு சென்ற போலீசார், அங்கு பதுங்கியிருந்த பெண் தாதா காளீஸ்வரியையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். எஸ்பி வருண்குமார் (பொறுப்பு) கூறுகையில், ‘‘போலீசார் திறம்பட செயல்பட்டு பெரிய அசம்பாவிதத்தை தடுத்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்ய உதவிய போலீசாருக்கு தென்மண்டல ஐஜி சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன’’ என்றார்.

கச்சநத்தம் சம்பவத்தில் கைதானவர்கள்

ஆவரங்காட்டை சேர்ந்த குட்ட முருகன், அஜய்தேவன் ஆகியோர் கச்சநத்தத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் மீது 20க்கும் மேற்பட்ட கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

Related Stories:

>