×

இமாலய உச்சத்தில் தங்கம் விலை.. வரலாற்றில் முதல் முறையாக சவரன் ரூ.37,744க்கு விற்பனை ; சுபநிகழ்ச்சி நடத்துவோர் கலக்கம்

சென்னை: தங்கம் வரலாற்றில் முதல் முறையாக  சவரன் ரூ.37,744க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் சவரன் ரூ.208 அதிகரித்தது. இந்த வாரத்தில் 38 ஆயிரத்தை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் தங்கம் விலை சில நேரத்தில் அதிரடியாக உயர்ந்து மறுநாள் அதே அளவில் குறைவதுமான போக்கும் காணப்பட்டது. நேற்று ஒரு கிராம் ரூ.4,692க்கும், சவரன் ரூ.37,536க்கும் விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். இதற்கு முன்னர் இருந்த அதிகப்பட்ச விலை அனைத்தையும் இந்த விலை முறியடித்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.26 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,718க்கும், சவரனுக்கு ரூ.208 அதிகரித்து சவரன் ரூ.37,744க்கும் விற்கப்பட்டது. இந்த விலை தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். இதற்கு முன்னர் இருந்த அனைத்து விலையையும் இன்றைய விலை முறியடித்தது. தங்கம் விலை ரூ.38,000ஐ நெருங்கி இருப்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.55.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: தற்போதைய காலக்கட்டத்தில் முதலீட்டுக்கு தங்கத்தை தவிர வேறு மாற்று பொருள் வேறு இல்லை என்ற நிலை முதலீட்டாளர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். இதுவே விலை உயர்வுக்கு காரணம். இந்த வாரமே சவரன் ரூ.38000 கடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Himalayan ,peak , Gold, shaving, price, jewelry, silver
× RELATED வங்கதேசத்துக்கு 511 ரன் இலக்கு: தனஞ்ஜெயா கமிந்து ஜோடி மீண்டும் அசத்தல்