×

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழக மின்வாரியத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: மத்திய அரசின் மின் சட்ட திருத்த மசோதாவால் மாநில மின் பகிர்மான நிறுவனங்கள் (தமிழக மின்வாரியம்) கடுமையாக பாதிக்கப்படும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியுடன் கூடிய மின் உற்பத்தி வசதி மற்றும் அதற்கான இணைப்பு வசதிகள் 49.47 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. தமிழகம் தற்போது மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உள்ளது. கடந்த 2011 முதல் தமிழகத்தில் 15,410 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தொடர்ந்து விளங்க மத்திய அரசின் ஆதரவு தேவையாக உள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசின் கொள்கை முடிவு விவசாயத்துறைக்கு பொருந்தாது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில் 100 யூனிட் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான மானியம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், தனியார் ஏஜென்சிகள், துணை லைசென்ஸ் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதனால் கிராமப்புறங்களுக்கு மின் பகிர்வு செய்யும் அரசு நிறுவனங்கள் மிகுந்த வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும். இது பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஹைட்ரோ பவர் என்பது பருவகாலத்தை சார்ந்துள்ள மின்சக்தி உற்பத்தி முறை.

இது மின் பகிர்வு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வராது. மேலும், சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கக்கூடிய மின் உற்பத்தி என தனித்தனியாக மின் கொள்முதலை நிர்ணயம் செய்வதற்கு பதிலாக மொத்தமாக புதுப்பிக்க கூடிய மின் சக்தி கொள்முதல் என நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளுக்கு சூரிய மின்சக்தி உற்பத்திக்கான வசதிகளை 100 சதவீத மத்திய அரசின் நிதி உதவியுடன் செய்து தரப்பட வேண்டும். இதற்கான செலவுகளை விவசாயிகளின் மேல் சுமத்தி
விடக்கூடாது. மின் பகிர்மான நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி ஒதுக்கி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனங்களின் பாக்கி தொகைகளை சரி செய்யும் திட்டத்தை தமிழக அரசு வரவேற்கும்.

அதே நேரத்தில் மின் நிதி கழகம் மற்றும் ஊரக மின் வசதி கழகத்திற்காக தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்திற்கு ரூ.20,622 கோடி கேட்டு ஏற்கனவே மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளோம். அந்த நிதி உதவியை விரைந்து வழங்க வேண்டும். மறு கட்டமைப்பு விரைவான மின் மேம்பாடு மற்றும் சீர்திருத்த திட்டத்தின் கீழ் ரூ.2661.85 கோடி மதிப்பிலான பணிகள் தமிழகத்தில் 88 நகரங்களில் முடிவடைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மத்தியஸ்த தீர்வு தொகை ரூ.268.86 கோடியை வழங்க வேண்டும். மேலும், இந்த திட்டத்தின் பகுதி 2ன் கீழ் 50 சதவீத கடன் தொகையான ரூ.1330.93 கோடியை நிதி உதவியாக வழங்க வேண்டும்.

தமிழகத்திற்கு மின் உற்பத்திக்காக தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை. எரிபொருள் ஆண்டுக்கு 21.291 மில்லியன் டன் தரப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்தத்திற்கு மாறாக கடந்த 5 ஆண்டுகளாக எரிபொருள் சப்ளை ஒப்பந்தத்தில் 61.6 சதவீதம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. வனப்பகுதி தொடர்பான கிளீயரன்ஸ் கிடைக்காததால் ஒடிசா மாநிலத்தின் சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்திலிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் மின் பகிர்மான கழகத்திற்கு நிலக்கரி வருவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளது. இதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு உரிய அனுமதியை வழங்க வேண்டும். மகாராஷ்டிரா மாநிலம் ரெய்கார்-புகழூர்-திருச்சூர் உயர் அழுத்த மின் தடத்திற்கு தேசிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். தமிழ்நாடு மின் வளர்ச்சி ஆணையத்திற்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.50.88 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியுடன் கூடிய மின்
உற்பத்தி வசதி மற்றும் அதற்கான இணைப்பு வசதிகள் 49.47 சதவீதம் தமிழகத்தில் உள்ளது.


Tags : Union Minister , Edappadi Palanisamy, Letter, Union Minister
× RELATED மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து