தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் முற்றுகை போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பண்ணாடி, காலாடி, வாதிரியார், இடும்பன், பள்ளன், தேவேந்திர குலத்தான் மற்றும் கடையன் ஆகிய ஏழு பிரிவுகளாக அழைக்கப்படுகின்ற மக்கள், தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரால் அழைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக காங்கிரஸ் நீண்ட நெடுங்காலமாக எழுப்பி வருகிறது. தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் உணர்வுகளை அதிமுக அரசு தொடர்ந்து புண்படுத்தி, புறக்கணித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி எப்பொழுதுமே இச்சமுதாய மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

எனவே, காங்கிரஸ் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவினரையும் ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்தமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படவேண்டிய முடிவினை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்கவேண்டும். அப்படி அறிவிக்கப்படவில்லையெனில் தமிழக சட்டமன்றம் கூடுகிற போது, எனது தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன். இப்பிரச்னைக்கு பிரதமர் மோடி உறுதியான ஆதரவை தெரிவிக்கவில்லையெனில் நாடாளுமன்ற வளாகத்திலேயே மகாத்மா காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: