×

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் தமிழக அரசின் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் மொத்தம் 40 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் இங்கு தங்கி இருக்கும் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி 9வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த 29 பேர், 2 மற்றும் 6வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. அதன்படி சிகிச்சை பெறுவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக மருத்துவமனையில் இயக்குநர் மற்றும் தலைமை மேற்பார்வையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறியதாவது:
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காப்பக நிர்வாகிகள் உண்மையான எண்ணிக்கை வெளியிடாமல் மறைக்கின்றனர். குறிப்பாக இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் முழு பாதுகாப்பு கவச உடை வழங்குவதில்லை. மாஸ்க் மற்றும் கையுறை மட்டுமே வழங்குகின்றனர். இதுதான் நோய் தொற்று பரவியதற்கு முக்கிய காரணம். தற்போது நோய் தொற்று ஏற்பட்ட வார்டுகள் மூடப்பட்டுள்ளது. அங்கு இருந்தவர்கள் வெளி நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள். எனவே இங்கு உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Subversion, Mental Health, 40 people, Corona
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...