×

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மூதாட்டி சடலத்தை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு: போலீசாரிடம் வாக்குவாதம்

புழல்: கொரோனா நோய்தொற்றில் பலியான மூதாட்டியின் சடலத்தை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் புழல் 22வது வார்டில் திருநீலகண்ட நகர் பிரதான சாலையை சேர்ந்த 74 வயது மூதாட்டி கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், அவரது சடலத்தை அடக்கம் செய்ய நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் புழல் அருகே காவாங்கரை இலங்கை அகதிகள் முகாம் அருகே உள்ள சுடுகாட்டுக்கு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்டு வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, “வேறொரு பகுதியை சேர்ந்தவரின் சடலத்தை இங்கு அடக்கம் செய்யக்கூடாது” என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து, தகவலறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த பொதுமக்களிடம், “இனி வரும் காலங்களில் வேறொரு பகுதியை சேர்ந்தவரின் சடலங்களை இங்கு அடக்கம் செய்ய மாட்டோம்” என சமாதானம் பேசி உறுதி கூறினர். இதனையேற்று, அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து, கொரோனா நோய்தொற்றில் பலியான மூதாட்டியின் சடலத்தை காவாங்கரை சுடுகாட்டில் மாநகராட்சி ஊழியர்கள் அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : protest ,burial ,coroner , Corona, dead grandmother, burial, public protest, police, argument
× RELATED வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க...