×

கோயம்பேட்டில் பரபரப்பு வீடு புகுந்து பிரபல ரவுடி கொலை: மர்ம கும்பலுக்கு வலை

அண்ணாநகர்: வீடு புகுந்து பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த கும்பலை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஐயப்பன்தாங்கல் திருவள்ளுவர் தெரு, சின்ன கொளுத்துவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (29). பிரபல ரவுடி. இவர் மீது கோயம்பேடு, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஸ்ரீகாந்த், ஆக்டிங் கார் ஓட்டுனராக வேலை செய்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். கோயம்பேடு அன்னை சத்யா தெருவில் அவரது தந்தை பாலசுப்பிரமணி வசிக்கிறார். அவரை சந்திக்க ஸ்ரீகாந்த் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில், ஸ்ரீகாந்த் அவரது நண்பர் வடபழனியை சேர்ந்த கார்த்திக்குடன் தந்தை வீட்டிற்கு நேற்று முன்தினம் மது அருந்தச் சென்றார். மது அருந்தி கொண்டு இருக்கும்போது  பாலசுப்பிரமணி கடைக்கு சென்று உணவு வாங்கி விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். பின்னர் உணவு வாங்கி வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஸ்ரீகாந்த் தலை, கை, கால், வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஸ்ரீகாந்த்தின்  தந்தை பாலசுப்பிரமணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது சம்பந்தமாக திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார் தலைமையில் ஆய்வாளர்கள் மாதேஷ்வரன், முருகன், ராதாகிருஷ்ணன் ஆகிய கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஸ்ரீகாந்த்துக்கு மோனிஷா என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர். சமீபகாலமாக கோயம்பேட்டில் ரவுடிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டு வருகிறது. எனவே ரவுடிகளுக்கிடையே நடந்த மோதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : murder ,Mystery gang ,Mystery gang' Rowdy , Coimbatore, Homecoming, Rowdy Murder, Mystery Gang, Web
× RELATED மதுரையில் இரட்டைக்கொலை