×

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் மகன் இறப்பு தாய் தொடர்ந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் மகன் இறந்ததாக தாய் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆசீர்வாதபுரம் அருகே தெற்கு பேய்குளத்தைச் சேர்ந்த வடிவு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மூத்த மகன் துரையை கொலை வழக்கில் தேடுவதாக கூறிய சாத்தான்குளம் போலீசார், கடந்த மே 23ம் தேதி 2வது மகன் மகேந்திரனை  இழுத்துச்சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் மகேந்திரனை தலை, உடல் முழுவதும் பலமாக தாக்கியுள்ளனர். மறுநாள் இரவு மகேந்திரனை விடுவித்தனர்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூன் 13ல் மகேந்திரன் உயிரிழந்தார். சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்டதில் தந்தை, மகன் இறந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்கிறது. அதேபோல் என் மகன் மகேந்திரன் போலீசார் தாக்கியதில் இறந்தது குறித்தும் உரிய விசாரணை செய்யவும், எங்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.பொங்கியப்பன் நேற்று விசாரித்து, உள்துறை செயலர், டிஜிபி, ஐஜி மற்றும் டிஐஜி, தூத்துக்குடி எஸ்பி உள்ளிட்டோர்  பதிலளிக்க உத்தரவிட்டு வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Tags : Government ,Sathankulam ,death , Sathankulam police, attack, son death, mother case, govt
× RELATED இன்ஸ்டா படுத்தும்பாடு… குளத்தில்...