×

ஜெயலலிதா கொண்டு வந்த போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு மாநிலம் முழுவதும் தடை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறப்பில் நேரடி தொடர்பை தொடர்ந்து நடவடிக்கை; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்த வழக்கில் எழுந்த புகாரை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த போலீஸ் நண்பர்கள் குழுவை தமிழகம் முழுவதும் தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் கடந்த 1993ம் ஆண்டு முதன் முதலில் ‘போலீஸ் நண்பர்கள் குழு’ உருவாக்கப்பட்டது. இந்த குழுவை தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள பிரதீப் வி பிலிப் என்பவர் தான் அறிமுகம் செய்தார்.  பின்னர் 1994ம் ஆண்டு மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒரு நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த போலீஸ் நண்பர்கள் குழு போலீசாருடன் இணைந்து திருவிழா காலங்கள் மற்றும் இரவு பாதுகாப்பு பணிகளில் இணைந்து செயல்பட்டு வந்தனர். இதற்காக மாவட்ட வாரியாக போலீஸ் நண்பர்கள் குழு அலுவலகம் உருவாக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வந்தது.  

பிற்காலத்தில் அரசியல் பிரமுகர்கள் தங்களுக்கு வேண்டிய நபர்களை போலீஸ் நண்பர்கள் குழுவில் இணைத்து தங்களுக்கு ஏற்றப்படி அவர்களை வைத்து கொண்டனர். இதனால் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பல இடங்களில் போலீஸ் நண்பர்கள் குழுவினர் செய்யும் தவறுக்கு போலீசார் கடுமையாக விமர்சனத்திற்குள் உள்ளாகினார்கள். இதுகுறித்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீஸ் நண்பர்கள் குழுவை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அந்த கோரிக்கைகள் எதுவும் தமிழக அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது, இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இரண்டு வியாபாரிகள் இறப்புக்கு போலீசார் தான் காரணம் என்று திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டது. அதைதொடர்ந்து மதுரை உயர் நீதிமன்ற கிளை தானாக வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்த இந்த வழக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து 2 வியாபாரிகள் கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் 2 உதவி ஆய்வாளர்கள் என 5 போலீசாரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கும் கொலையில் நேரடி தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையில் சாத்தான்குளத்தில் உள்ள 20 போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு தொடர்பு இருப்பதும் உறுதியானது. அதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் நண்பர்கள் குழுவை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. பின்னர் கடந்த 5ம் தேதி அதிரடியாக திருச்சி, மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் என 11 மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் தங்களது மாவட்டத்திற்குள் ‘போலீஸ் நண்பர்கள் குழு’வுக்கு அதிரடியாக தடை விதித்தனர். அதேநேரம் தமிழக டிஜிபி திரிபாதி போலீஸ் நண்பர்கள் குழு பயன்படுத்துவது குறித்து அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று வாய் மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை தொடர்ந்து மாவட்டவாரியாக போலீஸ் நண்பர்கள் குழுவை மாவட்ட கண்காணிப்பாளர்கள் தடை செய்து வந்தனர். அதேநேரம் சென்னை மாநகர காவல் துறையில் ‘போலீஸ் நண்பர்கள் குழு’ தடை செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் போலீஸ் நண்பர்கள் குழு குறித்து முழு அறிக்கை அளிக்க டிஜிபி திரிபாதிக்கு உத்தரவிட்டப்பட்டு இருந்தது. அந்த உத்தரவை தொடர்ந்து டிஜிபி திரிபாதி  மாவட்ட வாரியாக உயர் காவல் துறை அதிகாரிகளிடம் போலீஸ் நண்பர்கள் குழு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் பெரும்பாலான காவல்துறை உயர் அதிகாரிகள் போலீஸ் நண்பர்கள் குழு செய்யும் தவறுகளால் தான் காவல் துறைக்கு கெட்டபெயர் உள்ளது. எனவே குழுவை கலைத்து விடலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து டிஜிபி திரிபாதி போலீஸ் நண்பர்கள் குழு குறித்து முழுமையாக அறிக்கையை தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரிடம் தாக்கல் செய்தார். அதைதொடர்ந்து  தமிழக அரசு உத்தரவுப்படி ‘போலீஸ் நண்பர்கள் குழு’ மாநிலம் முழுவதும் தடை செய்யப்படுவதாக நேற்று உள்துறை செயலாளர் பிரபாகர் அரசாணை வெளிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது கடந்த 1994ம் ஆண்டு தமிழகம் முழுவதும் போலீசாருடன் சேர்ந்து பணியாற்ற ‘போலீஸ் நண்பர்கள் குழு’ நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு  கடந்த 26 ஆண்டுகளாக போலீசாருடன் இணைந்து பணியாற்றி வந்த போலீஸ் நண்பர்கள் குழுவை தமிழக அரசு மாநிலம் முழுவதும் தடை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

* 1993ம் ஆண்டு ‘போலீஸ் நண்பர்கள் குழு’ உருவாக்கப்பட்டது.
* டிஜிபி அந்தஸ்தில் உள்ள பிரதீப் வி பிலிப் தான் இதை அறிமுகம் செய்தார்.
* 1994ம் ஆண்டு மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
* திருவிழா காலங்கள், இரவு ரோந்தில் போலீசுடன் இணைந்து ‘நண்பர்கள்’ செயல்பட்டனர்.
* போகப்போக போலீசாகவே நினைத்து அத்துமீறத் தொடங்கினர்.

Tags : police friends ,Tamil Nadu ,state Government ,Jayalalithaa , Jayalalithaa, police friends group, statewide ban, sathankulam, father, son death, govt
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...