×

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணி தாமதம் கூடுதலாக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு: மேலும் ரூ.10 கோடி நிதி கேட்டு அறிக்கை தாக்கல்; ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிக்க மீண்டும் கெடு

சென்னை: ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பணிகளை முடிக்க எடப்பாடி மீண்டும் கெடு விதித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், நினைவிட கட்டுமான பணிக்கு ரூ.50.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நினைவிட கட்டுமான பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018 மே 7ம் தேதி அடிக்கல் நாட்டினார். அன்றைய தினத்தில் இருந்து இரவு, பகலாக கட்டுமான பணி நடந்து வருகிறது.  

இந்த நிலையில், இப்பணிகளை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க முதல்வர் எடப்பாடி கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகனுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், பினீக்ஸ் பறவை வடிவமைப்பு பணிகளை மேற்கொள்வதில் ஒப்பந்த நிறுவனத்துக்கு போதிய அனுபவம் இல்லாததால், 12 மாதங்களில் முடிய வேண்டிய பணி தற்போது வரை முடிவடையாமல்உள்ளது. இந்த நிலையில், நினைவிட பணிகளை முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் தற்போது கூடுதலாக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நினைவிட அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் மையம் முழுவதும் ஏசி வசதி செய்யப்படுகிறது. மேலும், நினைவிட பராமரிப்பு பணிக்கு மாதம் நிதி ஒதுக்க வேண்டும். எனவே, இதற்காக, ரூ.10 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி பொதுப்பணித்துறை அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி, நினைவிட பணிகளை எப்போதுதான் முடிப்பீர்கள் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அதிகாரிகள் தரப்பில், கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. அந்த நேரத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இருப்பினும், வேலூர் மாவட்டத்தில் இருந்து கூடுதல் ெதாழிலாளர்களை வரவழைத்து வேலை செய்தோம். இந்த மாத இறுதிக்குள் 90% பணிகளை முடித்து விடுவோம். அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விடும். இதற்காக கூடுதல் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று முதல்வரிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்து இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Jayalalithaa , Jayalalithaa memo, construction delay, additional Rs 7 crore fund, allotment, Rs 10 crore
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...