×

பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா? தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட வேண்டும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உரிய குழுக்கள் அமைக்க உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமுதாய சமையல் கூடம் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண் விசாரணைக்கு
வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பாலன் ஹரிதாஸ், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு கவச உடைகள் வழங்கப்படவில்லை. இதனால் கொரோனா தொற்று அபாயம் உள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட குழுக்கள் அமைக்கப்படவில்லை என்று தெரிவித்தார். அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி,  முன் கள  பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.   போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதா, தமிழகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உடைகள் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரிவான பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : state ,committees ,district ,India ,Government , Disaster Management Act, Under State, District Level, Groups, Government of Tamil Nadu
× RELATED ஆந்திர மாநில போலீசாரின் உதவியுடன்...