×

கல்வான் எல்லையில் 2 கி.மீ பின்வாங்கியது சீன படை: இந்திய ராணுவம் தகவல்

புதுடெல்லி: கல்வான் எல்லையில் சீன ராணுவம் 2 கிமீ தொலைவுக்கு பின்வாங்கி விட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே கடந்த 15ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டன. போர் பதற்றம் நிலவிய நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா, மற்றும் பாங்காங்க் திசோ ஏரிப்பகுதியில் உள்ள பிங்கர் பகுதிகளில் இருந்து படைகளை மிக விரைவில் விலக்கிக் கொள்வதென இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த 5ம் தேதியே கல்வான் எல்லையில், சீனா தனது கட்டமைப்புகளை அகற்றும் பணியை தொடங்கியது. ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதிகளில் இரு ராணுவமும் தனது படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை தொடங்கின. நேற்று முன்தினம் 2வது நாளாக பணிகள் தொடர்ந்தன.

இந்நிலையில், ஹாட்ஸ்பிரிங்சின் பேட்ரோலிங் பாயின்ட் 15 பகுதியில் இருந்து சீன ராணுவம் முழுமையாக 2 கிமீ தொலைவுக்கு பின்வாங்கி விட்டதாக இந்திய ராணுவம் நேற்று உறுதி செய்துள்ளது. சீன படையினர் கூடாரங்களை காலி செய்து, தங்கள் வாகனங்களுடன் 2 கிமீக்கு பின்வாங்கியுள்ளனர். கோக்ராவில் படைகள் வாபஸ் பணி இன்று முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் வாபஸ் பெறப்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவம் முழு ஆய்வு மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட படைகள் வாபஸ் பணி முழுமையாக முடிந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

* கவச வாகனங்கள் வாபஸ் இல்லை
எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து 2 கிமீ தொலைவுக்கு சீன ராணுவம் பின்தங்கினாலும், கல்வான் ஏரியை ஒட்டி தனது ஆயுதங்களையும், கவச வாகனத்தையும் தொடர்ந்து நிலைநிறுத்தி உள்ளன. இதனால் இந்திய ராணுவம் மிகுந்த எச்சரிக்கையில் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆதாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags : Indian Army ,Chinese ,Kalwan ,Chinese Army ,border , Kalvan border, 2km retreated, Chinese force, Indian Army, information
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...