×

யுஎஸ் ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நடால் விளையாடுவாரா?

மாட்ரிட்: கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ரபேல் நடால் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன் ரத்து செய்யப்பட்டது. மற்றவவை தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு சர்வதேச போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அப்படி மே மாதத்தில் நடைபெற வேண்டிய யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தவிர வேறு யாரும் யுஎஸ் ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்யவில்லை. உலகின் முதல் நிலை வீரரும், கொரோனாவில் இருந்து மீண்டவருமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா) யுஎஸ் ஓபனில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று  கூறியுள்ளார்.

இந்நிலையில், யுஎஸ் ஓபன் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் நடால் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. அவர் இதுவரை யுஎஸ் ஓபனில் பங்கேற்பது குறித்து எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் ஸ்பெயினில் நடைபெறவுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதை அவர் உறுதி செய்துள்ளார். அந்தப் போட்டி செப்.14ம் தேதி தொடங்குகிறது. யுஎஸ் ஓபன் ஆக.31 முதல் செப்.13 வரை நடைபெறுகிறது. யுஎஸ் ஓபன் முடிந்த மறுநாளே மாட்ரிட் போட்டியில் நடால் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு.

அந்த போட்டியின் இயக்குநர்களில் ஒருவரான பெலிசியானோ லோபஸ், ‘எனது நண்பர் நடாலிடம் பேசினேன். செப்டம்பரில் தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்’ என்று ட்வீட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள நடால், ‘மிகச்சரி பெலி. செப்டம்பர் மாதம் மாட்ரிட்டில் சந்திப்போம். அதுவரை எல்லாம் நல்லதாகவே நடக்கும்’ என்று கூறியுள்ளார். அதனால் நடப்பு சாம்பியனான நாடல், யுஎஸ் ஓபனில் பங்கேற்பது சந்தேகம்தான். அதே நேரத்தில் அமெரிக்காவில் நிலவும் நிலைமையை பார்க்கும் போது யுஎஸ் ஓபன் நடப்பதே சந்தேகம் என்கிறார்கள்.


Tags : Nadal ,US Open Tennis , Will Nadal play in the US, Open Tennis, Current Champion?
× RELATED ஆஸி. ஓபன் டென்னிஸ் காயத்தால் விலகினார் நடால்