×

உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகனை தொடர்ந்து மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா: முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு

சென்னை: தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகனை தொடர்ந்து, மின்துறை அமைச்சர் தங்கமணியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் நேற்று முன்தினம் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணிக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். நேற்று காலை கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததால், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் தமிழக முதல்வரை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மதியம் சந்தித்து தமிழகத்தின் மின் திட்டங்கள் குறித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் தங்கமணியும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவியும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 8 எம்எல்ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மின்சார துறை அமைச்சர் தங்கமணியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தமிழக அமைச்சர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் தங்கமணி, நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக அமைச்சர் தங்கமணி, தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு நாட்களில் கட்சி சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இதன்மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நாமக்கல்லில் உள்ள அமைச்சர் தங்கமணியின் அலுவலகம் மூடப்பட்டது. மேலும், அமைச்சர் தங்கமணி நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கலந்து கொண்டார். அதன்பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். மேலும், மின்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் அவரை சந்தித்துப் பேசினர். தற்போது அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தங்கமணியை சந்தித்துப் பேசிய அமைச்சர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

* அமைச்சர்கள் அச்சம்
அமைச்சர் தங்கமணி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர். காரணம், 2 நாட்களுக்கு முன் ஜெயலலிதா நினைவிடத்தை விரைவாக கட்டி முடிப்பதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்பட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அடுத்து, நேற்று முன்தினம் இரவு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஐவர் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆகிய 5 பேர் ஒரே அறையில் கூடி ஆலோசனை நடத்தினர். அன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்த அனைவருமே கொரோனா பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Minister of Higher Education ,Minister of Home Affairs , Minister of Higher Education, Hon. Minister, Home Minister
× RELATED அரியர்ஸ் தேர்வுகள் தொடர்பாக ஏஐசிடிஇ...