×

மாவட்ட ஆட்சியர் முன்பு குடிபோதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த அரசு ஊழியர்!: திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட வனக்கோட்டத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் மதுபோதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.  திண்டுக்கல்லை சேர்ந்த குமார் என்பவர், கரூர் வனக்கோட்ட அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணியில் இருக்கும் போதே பணம் கையாடல் செய்ததாக கடந்த மார்ச் மாதம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்டிருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த குமார், இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு மதுபோதையுடன் வருகை தந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அலுவலகத்தில் உள்ள தலைமை வன பாதுகாப்பு பிரிவிற்கு சென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தனக்கு பாதி சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அலுவலகத்தில் முறையான பதில் இல்லாத காரணத்தினால் வெளியே வந்த குமார், அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலில் தீக்காயம் அதிகமாக உள்ளதால் தற்போது அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யவுள்ளதாக மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் தீவைத்துக் கொண்ட சம்பவம் வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Government servant ,district collector ,Dindigul , District Collector, Kerosene, Government Servant, Dindigul
× RELATED ஆரணியில் காதலனின் தந்தை மிரட்டியதால்...