×

காரைக்குடியில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்று நோய் ஆபத்து: போராட்டம் நடத்த மக்கள் முடிவு

காரைக்குடி: மருத்துவமனைகளில் பயன்படுத்திய மருந்துபாட்டில்கள் உள்பட பல்வேறு கழிவுகளை சாலை ஓரங்களில் கொட்டி விட்டு செல்வதால் பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. காரைக்குடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய அளவிலான தனியார் மருத்துவமனைகள் உள்ளன. மருத்துவமனை நடத்த பயோமெடிக்கல்  வேஸ்ட் சான்று பெற்றால் மட்டுமே லைசென்ஸ் என்ற விதிமுறை உள்ளதால், அனைத்து தனியார் மருத்துவமனைகளும் முறையாக பயோமெடிக்கல் வேஸ்டை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்கு என தஞ்சையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பயோ மெடிக்கல் வேஸ்டை சேகரித்து செல்கின்றனர்.

இதற்கு என கட்டணம் கட்ட வேண்டும் என்பதால் முறையாக லைசென்ஸ் பெறாமல் செயல்படும் கிளிக்குகள் மற்றும் கிராமங்களில் அனுமதியின்றி சிகிச்சை அளிப்பவர்கள் இந்த மருந்துகழிவுகளை பல மாதங்கள் சேர்த்து வைத்து அதனை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொட்டி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். காரைக்குடி அருகே மானகிரியில் இருந்து திருச்சி பைபாஸ் செல்லும் சாலையில் சமூக விரோதிகள் சிலர் இதுபோன்ற மருத்துவ கழிவுகளை கொட்டுவதை தொடர்கதையாக்கி வருகின்றனர். இதனால் பல்வேறு வகையான நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது.

இதனால் சுகதாரதுறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், பயோமெடிக்கல் வேஸ்டை முறையாக அகற்ற வேண்டும். பயன்படுத்திய மருந்துபாட்டில்கள் உடைந்து காலில் குத்துவதற்கு வாய்ப்புள்ளது. நோயாளிகளுக்கு பயன்படுத்திய துணிகள் ஆகியவற்றின் மூலம் நோய் தொற்று ஏற்படும். மருந்து பாட்டில்களை முறையாக ஆய்வு செய்தால் இது எந்த ஏஜென்சியில் இருந்து வாங்கப்பட்ட மருந்து என்பதை கண்டறிய முடியும். அவர்கள் மூலம் இந்த மருந்து யாருக்கு சப்ளை செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.

அலட்சியமாக விட்டு விட்டால் புதுவிதமான தொற்றுநோய் பரவ காரணமாகிவிடும். சமூகஆர்வலர் மானகிரிமதி கூறுகையில், எங்கள் பகுதியில் இருந்து திருச்சி பைபாஸ் சாலையை இணைக்கும் பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகளை  தொடர்ந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இதனை போலி டாக்டர்கள் யாரும் பயன்படுத்தியது தெரியவந்தால் அவர்களை கைது செய்ய வேண்டும். ஏற்கனவே கொரோனா அச்சத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது புதிய நோய் தாக்குதல் ஏற்பட்டால் மக்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகும். சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால்  மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.


Tags : Roadside Dumping ,Karaikudi , Karaikudi, medical waste, infection risk
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!