×

கடலாடி பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

சாயல்குடி: கடலாடி மற்றும் கிராம பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதியவர்கள், குழந்தைகளுக்கு பரவும் என பீதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடலாடியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தாலுகா, யூனியன் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், தாலுகா அரசு மருத்துவமனை இயங்கி வருவதால் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமமக்களும் வந்து செல்கின்றனர். இதனால் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியாக கடலாடி விளங்குகிறது.

இந்நிலையில் இப்பகுதியில் கடலாடி, ஆப்பனூர், நரசிங்கக்கூட்டம், கடுகுசந்தைசத்திரம், மேலச்செல்வனூர், ஒப்பிலான், சாயல்குடி, நரிப்பையூர், எஸ்.தரைக்குடி, எஸ்.டி.சேதுராஜபுரம், கன்னிராஜபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனா தொற்று ஒரு சிலருக்கு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து விட்டனர். இந்நிலையில் இப்பகுதியில் தற்போது மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதனை போன்று அருகிலுள்ள கே.கருங்குளம், பூதங்குடி, மங்களம், ஆ.புனவாசல், மாரந்தை, ஓரிவயல், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், கோட்டையேந்தல், பூலாங்குளம், புத்தேந்தல், கடுகுசந்தை, சத்திரம், பெரியகுளம், மாரியூர்,

ஒப்பிலான் மற்றும் சாயல்குடி சுற்றியுள்ள கிராமபகுதிகள் என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கண் எரிச்சல், தலைவலி, உடல்சோர்வு, தொடை, கால்பகுதி உளைச்சல் போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் அடிப்பதாக கூறுகின்றனர். பொதுமக்கள் கூறும்போது. மர்ம காய்ச்சல் குறித்து ரத்தமாதிரி சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும். மர்ம காய்ச்சல் வந்தவர்களையும் கண்டறிந்து வீட்டில் தனிமை படுத்தி கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்த வேண்டும். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனால் மர்மகாய்ச்சல் என்று கவனக்குறைவாக இருந்தால் கொரோனா பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சம் உள்ளது. எனவே உடனடியாக கடலாடி மற்றும் கிராம பகுதிகளில் சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கிராம மருத்துவ முகாம்களை அமைத்து போர்கால அடிப்படையில் கிராம மக்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்றனர்.

Tags : sea , Seaweed, mystery fever
× RELATED குமரி கடலோர பகுதிகளில் கொரோனா பரவி...