×

கொரோனா வருவாய் இழப்பை காரணம் காட்டி 45,000 ஊழியர்களை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு

* பணிகள் தேங்கும் அபாயம்
* தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

திருச்சி: கொரானா வருவாய் இழப்பை காரணம் காட்டி 45,000 ஊழியர்களை குறைச்ச ரயில்வே வாரியம் முடிவு செய்திருப்பதால் வழக்கமான நிர்வாகப் பணிகள் தேக்கமடையும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் குற்றச்சாட்டியுள்ளது. ரயில்வே வாரிய இணை இயக்குநர் அஜெய் ஜா கடந்த ஜூலை 2ம் தேதி ஒரு உத்தரவு வெளியிட்டார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு உருவாக்கப்பட்ட புதிய பணியிடங்கள் ரத்து செய்தும், பாதுகாப்பு அல்லாத பிரிவுகளில் 50 சதவீத காலிப்பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பபட மாட்டாது என்றும் தெரிவித்து இருந்தார்.

மேலும் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி 35,277 காலிப்பணியிடங்கள் நிரப்ப ரயில்வே தேர்வாணையம் விளம்பரம் வெளியிட்டதற்கு இதுவரை தேர்வுகள் நடக்கவில்லை என ரயில்வே தொழிற்சங்கங்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணை பொதுச் செயலாளர் மனோகரன் தெரிவித்ததாவது: ரயில்வேயில் கடந்த 1.6.2019 அன்று 2லட்சத்து 98 ஆயிரத்து 574 காலி இடங்கள் இருந்தது. அதில் தெற்கு ரயில்வே காலி இடங்கள் 20,562. குரூப் ‘சி’ யில் 77,858 பதவிகள், குரூப் ‘டி’ யில் 63,202 பதவிகள் என மொத்தம் 1,41,060 பணி நியமனங்கள் கடந்த 2019 ஆண்டு இறுதியில் நடந்தன.

இதில் மீதம் 1 லட்சத்து 57 ஆயிரத்து 514 காலிப்பணியிடங்கள் இருந்தன. பாதுகாப்பு அல்லாத பிரிவுகளில் 24,000 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடப்பதும், தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. பணி ஓய்வு, பணி நீக்கம், ராஜினாமா காரணங்களால் காலியிடங்கள் எண்ணிக்கை இதுவரை இரண்டு லட்சத்தை எட்டி விட்டது. இதில் அலுவலக கிளார்க்குகள், கணக்கர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்கள், பயணச்சீட்டு விற்பனையாளர்கள், தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள், கட்டிட பராமரிப்பு பணியாளர்கள், கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், பலதுறை கடைநிலை ஊழியர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய பதவிகள் என மொத்தம் 90 ஆயிரம் பணியிடங்கள் பாதுகாப்பு அல்லாத பிரிவுகளில் உள்ளன.

இதில் 50 சதவீத இடங்களைத்தான் கொரோனா வருவாய் இழப்பை காரணம் காட்டி 45,000 ஊழியர்களை ரயில்வே குறைக்கிறது. இதனால் வழக்கமான நிர்வாகப் பணிகள் தேக்கமடையும். நடவடிக்கையை ரயில்வே அமைச்சகம் திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பாதுகாப்பு அல்லாத பிரிவுகளில் 24,000 பணியிடங்களுக்கு தேர்வு நடப்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

Tags : Railway Board ,revenue loss ,Corona , Corona, loss of revenue, employees, Railway Board
× RELATED பயணிகள் மற்றும் சரக்கு ரயில்...