×

புதுக்கோட்டை அருகே கல்லணை கால்வாயில் பாசன ஏரி மதகு உடைந்தது: 300 ஏக்கர் விவசாயம் பாதிப்பு

அறந்தாங்கி: புதுக்கோட்டை அருகே கல்லணைக் கால்வாயில் பாசன ஏரி மதகு உடைந்தன. ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் 300 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டங்களில் 168 ஏரிகள் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீர்ப்பாசனம் நடை பெற்று வருகிறது. கல்லணைக் கால்வாய் மூலம் பாசனம் நடைபெறும் இப்பகுதியில் கடந்த மாதம் வேம்பங்குடி அருகே கல்லணைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்ட பாசனத்திற்காக கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. புதுப்பட்டினம் ரெகுலேட்டரில் புதுக்கோட்டை மாவட்ட பாசனத்திற்காக 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை இந்த தண்ணீர் மேற்பனைக்காடு வானொலி தகவல் மையம் அருகே வந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள ஜெகநாதன் ஏரிக்கு கல்லணைக் கால்வாயில் இருந்து தண்ணீர் செல்லும் மதகு திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் மதகில் அதிக அளவு தண்ணீர் சென்றது.

அதிக அளவு தண்ணீர் சென்றால் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டதால், அப்பகுதி விவசாயிகள் உடனடியாக மணல் மூட்டைகளால் மதகில் சென்ற தண்ணீரை அடைத்தனர். தகவல் அறிந்த பொதுப்பணித்துறை கல்லணைக் கால்வாய் கோட்ட ஆயிங்குடி பிரிவு உதவிபொறியாளர் புஷ்பராணி மேற்பார்வையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மதகில் தண்ணீர் வெளியேறாமல் தடுத்தனர். இந்த மதகு திடீர் உடைந்ததால் ஜெகநாதன் ஏரிக்கு தண்ணீர் செல்லாமல் நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் 300 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Irrigation lake collapse ,Kallani Canal ,Pudukkottai ,irrigation lake , Pudukkottai, Kallani Canal and irrigation lake cleared
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...