முதுகுளத்தூர் அருகே எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: தொல்லியியல் துறை ஆய்வு செய்ய கிராம மக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி:  முதுகுளத்தூர் அருகே முதுமக்கள் தாழி, மண்பானைகள், மனித எலும்புகள், ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மேலக்கொடுமலூரில் விவசாயம் பிரதான தொழிலாக நடந்து வருகிறது. தற்போது விவசாய பயன்பாட்டிற்காக அரசு மானியத்துடன் பண்ணை குட்டைகளை விவசாயிகள் வெட்டி வருகின்றனர். நேற்று ஒரு நிலத்தில் ஜேசிபி மூலம் 7 அடிக்கு மேல் தோண்டினர். அப்போது மனித எலும்புக்கூடுகள் உள்ள முதுமக்கள் தாழி, பானைகளை தாங்கக்கூடிய பிரிமனை எனப்படும் பானைதாங்கி, சுடுமண் உறைகிணறு, மண்பாண்ட ஓடுகள் போன்றவை தென்பட்டது. இதனால் பண்ணைக்குட்டை வெட்டுவதை நிறுத்தி விட்டு முதுகுளத்தூர் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இப்பகுதியில் கடந்த 1990ம் ஆண்டு தோண்டும்போது கலைநயமிக்க மண்பாண்டங்கள், மண் ஓடுகள், அம்மிக்கல், முதுமக்கள் தாழி, எலும்புக்கூடுகள் தென்பட்டுள்ளன. இது குறித்து அப்போது தொல்லியியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் அந்த ஆய்வு பணி கிடப்பில் போடப்பட்டதால் கண்டுகொள்ளவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று மீண்டும் பண்டைய கால பொருட்கள் தென்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டிணம், அழகன்குளம், தொண்டி, சாயல்குடி போன்ற பகுதிகளில் கிடைத்த தொன்மையான பொருட்கள் போன்று மேலக்கொடுமலூரிலும் அரிய பொக்கிஷங்கள் கிடைக்கும். எனவே அரசு தொல்லியியல் துறை சார்பாக ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>