×

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் தன்னார்வலரிடம் ஆபாசமாக பேசிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் தன்னார்வலரிடம் ஆபாசமாக பேசியதாக உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், வீடுகள்தோறும் கணக்கு எடுக்கும் பணிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் தன்னார்வலர்கள் போல் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருபவர் கமலக்கண்ணன். அவர் அந்த மாநகராட்சி பகுதிகளில் பெண் தன்னார்வலர்கள் சில நபர்களை நியமித்து வேலை வாங்கி வந்துள்ளார். அதில் குறிப்பிட்ட ஒரு பெண்ணிடம் கமலக்கண்ணன் ஆபாசமாக பேசிய ஆடியோவானது சமூகவலைத்தளங்களில் வெளியானது. குறிப்பாக அந்த கல்லூரி மாணவியே நேரடியாக அந்த ஆடியோபதிவை காவல்துறையினரிடம் புகாராக அளித்திருந்தார்.

உதவி பொறியாளர் கமலக்கண்ணன், கல்லூரி மாணவியிடம் பல்வேறு  விதமாக ஆபாசமாக பேசியதாக புகார் ஒன்றை அருகிலிருக்கும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்திருந்தார். இதை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு இந்த ஆடியோவை ஆதாரமாக அளித்து புகாரானது அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளர் கமலக்கண்ணனை சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் மீது துறைரீதியான நடவடிக்கையும், தொடர் விசாரணையும் நடைபெறும் என்றும்  சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags : Madras Corporation ,Assistant Engineer , Madras Corporation Assistant Engineer Suspended
× RELATED சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட்