×

மைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் என கோவையில் பரபரப்பு விளம்பரம் : உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

கோவை: கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மூலிகை மைசூர்பாக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மூலிகை மைசூர்பாக்-வை சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என விளம்பரப்படுத்தியதை அடுத்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கோவை தொட்டிபாளையத்தை சேர்ந்த பலகாரக்கடை உரிமையாளரான ஸ்ரீராம், 19 வகை மூலிகைகள் வைத்து மைசூர்பாக் தயாரித்ததாகவும், இதனை சாப்பிட்டவர்கள் கொரோனா நோயிலிருந்து குணமாகியிருப்பதாகவும் கூறி வந்தார்.

தம் முன்னோர்கள் சித்த மருத்துவத்தில் கற்றுக்கொடுத்த சில வழிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரஸை தடுக்க மைசூர்பாக் தயாரித்துள்ளதாக அவர் தெரிவித்து வந்துள்ளார். நாள் ஒன்றுக்கு 4 துண்டுகள் மைசூர்பாக் சாப்பிட்டால் கொரோனா நோய் அண்டாது என்பது அவரது கருத்து. இதனை கொரோனா நோயாளிகள் முதலில் சாப்பிடும் போது கசப்பு தெரியும் எனவும், உடல் வலிமை அதிகரிப்பதன் காரணத்தால் பின்னர் அந்த மைசூர்பாக் கசப்பு தன்மையை இயக்கும் எனவும், இதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியாகிறது எனவும் அவர் விளம்பரப்படுத்தி இருந்தார்.

இதனை அரசு ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தால் இலவசமாக கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் மூலிகை மைசூர்பாக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இனிப்புக் கடையின் உரிமையாளர் ஸ்ரீராமிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மைசூர் பாக்கின் தரம், மூலிகை பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறதா, நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Mysoreba ,Goa ,Food Safety Department , Coimbatore, Mysorebak, Corona, Advertising, Food, Defense Department, Action, Inspection
× RELATED மதுரை சித்திரை திருவிழா.. அன்னதானம்...