×

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக புகார்..: டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த புகாரில் டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட போலீசார் தாக்கியதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த வடிவு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஜெயக்குமார் என்பவரின் கொலை வழக்கில் எனது மூத்த மகன் துரையை விசாரிக்க வந்த காவல் துறையினர், அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் இரண்டாவது மகன் மகேந்திரனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்,  என குறிப்பிட்டிருந்தார். மேலும், காவல் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் உள்ளிட்டோர் மகேந்திரனை கடுமையாகத் தாக்கியதாகவும், பின்னர் மே 24 ஆம் தேதி அன்று இரவு மகேந்திரன் சுயநினைவு இழந்த நிலையில் வெளியே அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், மகேந்திரனை மருத்துவமனையில் அனுமதித்தோம்.

தலையில் பலத்த காயம் உள்ளதாகவும், மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் ஜூன் 13 தேதி அன்று சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார், என்று குறிப்பிட்டார். இதுதொடர்பாக எஸ்.பி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று குறிப்பிட்டதோடு, எனது மகனைத் தாக்கிய காவல் துறையினர் மீது ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.

இதுபோலவே, எனது மகன் உயிரிழப்பு சம்பந்தமாக விசாரணை நடத்தவும், என் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும், என்று வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக டிஜிபி, உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் மற்றும் ரகு கணேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே தந்தை மகன் வழக்கில் காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர் மற்றும் ரகு கணேஷ் ஆகியோர் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : branch ,Madurai ,DGP , Sathankulam, police, Mahendran, death, DGP, Madurai branch
× RELATED குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு