உதகையில் தனியார் நிறுவன ஊழியர் மூலம் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...! தடுப்பு நடவடிக்கையாக நிறுவனம் மூடல்!

நீலகிரி:  நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த தனியார் ஊழியர் ஒருவர் மூலம் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உதகை அருகே ஹெல்லேன்னா ஹெலி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த நீடலே இன்டஸ்ட்ரீஸ் என்ற தையல் ஊசி நிறுவனத்தில் பணியாற்றும் 47 வயதுடைய ஒருவருக்கு கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இருப்பினும் அறிகுறிகளுடன் அவர் 2 நாட்கள் தினசரி அலுவல பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

உதகையிலிருந்து சிலமுறை அவர் கோவைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து, நீடலே இன்டஸ்ட்ரீஸில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது, பரிசோதனையில் 63 ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் 32 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொத்தமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ஊழியர்களுடன் தொடர்பிலிருந்த 2500 பேருக்கு உடல் திரவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கையாக நீடலே இன்டஸ்ட்ரீஸுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 755 உறுப்பினர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>