×

தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது :மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார். பிறகு தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் இன்று மதியம் மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர்.கே.சிங் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின்போது மின்சார துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள், செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் நடைபெறும் மின் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய சலுகைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு மின்சார சட்டத் திருத்த மசோதா குறித்து இருவரும் விவாதிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய இணை அமைச்சரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கண்டிப்பாக தொடர வேண்டும் என்றும் வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்பட வகை செய்ய வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். அது போல் தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்திற்கு எதிரான பிரிவை நீக்க மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. 1990-ல் திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.அ து போல் வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய மின்சார திருத்தச் சட்டம் தொடர்பாக மாநிலங்களிடம் கருத்து கேட்டுள்ள மத்திய அரசு, மின்சார மானியங்களை ரத்து செய்யும் வகையில் நிபந்தனைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : RK Singh ,Palanisamy ,Tamil Nadu , Tamil Nadu, Farmers, Free Electricity, Cancellation, Union Minister, RK Singh, Chief Minister Palanisamy
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...