×

இயற்கை மீதான அதீத காதல்.. புதுச்சேரி அருகே தனி ஒருவர் உருவாக்கிய காடு : அரியவகை மரங்கள்,பறவைகள்,சிறு விலங்குகளுக்கு புகலிடம்!!

புதுச்சேரி : புதுச்சேரி அருகே தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல காடு நூற்றுக்கணக்கான பறவை இனங்களுக்கும் சிறு விலங்குகளுக்கும் புகலிடமாக மாறி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையடிவார பகுதியில் வளையாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் இயற்கை மீது கொண்டிருந்த அதீத காதலாலும், மரங்கள் மற்றும் வனத்தை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில், 1989 ஆம் ஆண்டு புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரில் தன்னை இணைத்துகொண்டு சமூக சேவைகளையும், மரங்களை வளர்க்கும் பணிகளையும் செய்து வந்தார்.

உள்ளூர் இளைஞர்களின் துணையோடு எடுத்த முயற்சிக்கு பலனாக மிகவும் அரிதான மலை பூவரசன், கருங்காலி, வேங்கை மரங்கள் இந்த காட்டில் வேர் விட்டு இருக்கிறது. மரங்களை தேடி வரும் பறவைகளால் சுமார் 300 வகை மரங்களே இருந்த காட்டில் இப்பொது 600 வகையான மரங்கள் புதிதாக வளர்ந்துள்ளன. பறவைகளுக்காக தண்ணீர் தொட்டியும் அமைத்து பராமரிக்க, பச்சை புறா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் ஆரண்யாவை வாழ்விடமாக்கி கொண்டுள்ளன.

மான், தேவாங்கு, புனுகு பூனை, முள்ளம்பன்றி உள்ளிட்ட காட்டு விலங்குகளும் காட்டில் உலாவுகின்றன. புதுச்சேரியின் நீர் ஆதாரமாக இருக்கும் ஊசுடு ஏரிக்கு அருகிலேயே இந்த வனம் உள்ளது. வனத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நீர் வளம் பாதுகாக்கப்படுவதுடன் பறவைகள், மரங்கள், சிறு விலங்குகள் என பல்லுயிர் பெருக்கமும் நடக்கிறது. வனத்தை பார்க்க வருபவர்களுக்கும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் பற்றி சொல்லி கொடுக்கின்றனர். வருங்கால சங்கத்திற்கு நல்ல சுற்று சூழலை தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் சரவணன், உடலும் பூமியும் ஒன்று சொல்கிறார். உடலை போலவே பூமியையும் பராமரிக்க வேண்டும் என்பதே இவர் சொல்லும் செய்தி.


Tags : forest ,Puducherry ,refuge , Nature, Romantic, Puducherry, Individual, Forest, Rare Trees, Birds, Small Animals, Refuge
× RELATED காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட...