×

ஐ.நா கவனத்திற்கு சென்றதால் நடவடிக்கை; சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை நேரடியாக விசாரிக்கிறது டெல்லி சிபிஐ..!!

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை டெல்லி சிபிஐ நேரடியாக விசாரிக்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை- மகனுமான ஜெயராஜ் (வயது 58), பென்னிக்ஸ் (31)  ஆகியோர் ஊரடங்கு காலத்தில், கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக திறந்து வைத்திருந்த குற்றச்சாட்டில், கடந்த மாதம் 19ம் தேதி இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர், சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட  நிலையில், இருவரும் அங்கு கடுமையாக தாக்கி சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

ஜூன் 20ம் தேதி அதிகாலை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், 22ம் தேதி பென்னிக்சும், 23ம் தேதி ஜெயராஜூம் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த  சம்பவம் சாத்தான்குளம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிபிசிஐடி விசாரிக்கும்படி தெரிவித்தது. அதன்படி விசாரணையை  தொடங்கிய சிபிசிஐடி, ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 காவலர்கள என 5 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது.

இதற்கிடையில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்திருந்தார். இதை ஏற்று, இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதற்கிடையே, சாத்தான்குளத்தில் பணியில்  இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ-க்கு மாறுகிறது. தமிழக சிபிஐ அதிகாரிகள் அல்லாமல் டெல்லி சிபிஐ அதிகாரிகள் நேரடியாக விசாரணையை தொடங்கவுள்ளனர். டெல்லி சிபிஐ  புலனாய்வு 2-ம் பிரிவு அதிகாரிகள் வழக்கை விசாரிக்கின்றன. இந்த விவகாரம் ஐ.நா கவனத்திற்கு சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், சிறை அதிகாரிகள் மருத்துவர்கள், மாஜிஸ்திரேட்டும் சிபிஐ  விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.


Tags : UN ,Sathankulam ,Delhi CBI , Action due to UN attention; Delhi CBI to probe Sathankulam father-son murder case
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது