×

நாடு முழுவதும் 1 வாரத்திற்கு பிறகு டீசல் விலை உயர்வு

சேலம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக எரிபொருள் பயன்பாடு குறைந்து, கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தது. இதனால், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் அப்படியே நிலையாக வைத்துக் கொண்டனர். கச்சா எண்ணெய் விலை குறைப்பு பலனை மக்களுக்கு அளிக்காமல் மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்திக் கொண்டன.

ஜூன் மாத தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை உயரத்தொடங்கியதும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு அதிகரிக்க துவங்கியது. இதன்படி கடந்த ஜூன் 7ம் தேதியில் இருந்து ஒரு மாத காலமாக விலை ஏறுமுகத்தில் சென்றது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால், கடந்த 1ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் ஒரு வாரமாக  நிலையாக எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், நேற்றைய தினம் திடீரென டீசல் விலையை மட்டும் 19 பைசா உயர்த்தினர். இதனால், சென்னையில் நேற்றைய தினம் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.77.72ல் இருந்து 19 பைசா உயர்ந்து, ரூ.77.91க்கு விற்கப்பட்டது. பெட்ரோல் விலை ரூ.83.63 ஆக விற்பனையானது. கடந்த ஜூன் 7ம் தேதியில் இருந்து நேற்றைய தினம் (ஜூலை 7) வரையில் சரியாக ஒரு மாதத்தில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ₹8.09ம், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.9.59ம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags : Diesel , Nationwide, 1 week, diesel prices, hike
× RELATED தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு வராது!