×

சமூக பரவலாக மாறவில்லை முழு ஊரடங்கால் படிப்படியாக கொரோனா தொற்று குறைகிறது: முதல்வர் எடப்பாடி பேட்டி

சென்னை: முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் மூலமாக படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்றும், தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.  
சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியுட் வளாகத்தில் ரூ.136.86 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையம், 750 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு ஆக்சிஜன் வசதியோடு கூடிய 300 படுக்கை வசதிகளும், 60 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் அடங்கும்.

இந்த மையத்தில் 16 சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்கோ கார்டியாகிராம், 6 நடமாடும் எக்ஸ்ரே கருவிகளும், 28 வென்டிலேட்டர்கள், 40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள், 10 நடமாடும் ஆக்சிஜன் வழங்கும் கருவிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகளுடன் 80 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கொரோனா நோயை ஒழிக்க தமிழக அரசு கடுமையாக முயற்சிகள் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளது. 95 பரிசோதனை மையங்களில் தினசரி 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தேவையான அளவுக்கு மருத்துவ உபகரணங்கள் தயாராக உள்ளது. சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் மூலமாக படிப்படியாக கொரோனா தொற்று கடந்த 2, 3 நாட்களாக குறைந்து வருகிறது. அரசு எடுத்த நடவடிக்கைக்கு பலன் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. இருக்கிற இடத்தில் எல்லாம் பரவினால்தான் அது சமூக பரவல். தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. நோய் பரவல் குறைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

* மீண்டும் முழு ஊரடங்கு வர வாய்ப்பு இல்லை
ஒரு பக்கம் நோய் பரவலை தடுக்க வேண்டும். அதேவேளையில் வாழ்வாதாரத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். அதனால், முழுக்க முழுக்க ஊரடங்கை பிறப்பித்துக் கொண்டிருக்க முடியாது. கிட்டத்தட்ட 105 நாட்களுக்கு மேல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து ஊரடங்கை அறிவித்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடும். பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்படும். ஊரடங்கு மூலம் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து மக்களுக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் முழு ஊரடங்கு வர வாய்ப்பு இல்லை என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், முழுக்க முழுக்க இது மக்கள் கையில்தான் உள்ளது.

Tags : CM Edappadi , Social Dissemination, Full Curfew, Coronavirus Infection, Decrease, Chief Edapati Interview
× RELATED தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க 16...