×

நோய்தொற்று குறைந்து வரும் நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு: பொதுமக்கள் கடும் அச்சம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்த நிலையில் தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும், சென்னையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் எம்ஜிஆர் நகரை சேர்ந்த 65 வயது முதியவர், கொரட்டூரை சேர்ந்த 62 வயது முதியவர், புழுதிவாக்கத்தை சேர்ந்த 66 வயது முதியவர், திருவல்லிக்கேணியை சேர்ந்த 78 வயது முதியவர், பாடியை சேர்ந்த 78 வயது மூதாட்டி, பெரியமேட்டை சேர்ந்த 69 வயது மூதாட்டி உள்பட 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 68 வயது முதியவர், 67 வயது முதியவர், புழலை சேர்ந்த 67 வயது முதியவர், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 54 வயது ஆண், திருவள்ளூர் மாவட்டம் பெனவூர்பேட்டையை சேர்ந்த 62 வயது முதியவர், புழலை சேர்ந்த 38 வயது ஆண், கொளத்தூரை சேர்ந்த 72 வயது மூதாட்டி என 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதேபோன்று, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த 74 வயது முதியவர், எம்ஜிஆர் நகரை சேர்ந்த 78 வயது முதியவர், கொருக்குப்பேட்டையை சேர்ந்த 74 வயது முதியவர், மயிலாப்பூரை சேர்ந்த 76 வயது மூதாட்டி, அண்ணா நகர் மேற்கு பகுதியை சேர்ந்த 52 வயது ஆண்  உள்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருவது பொதுமக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Tags : Chennai ,deaths ,Corona , Infection, Declining Condition, Madras, Corona, 30 in One Day, Death, Public Fear
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...