×

நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை வைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மனநல ஆலோசனை

* தயார் நிலையில் 100 தன்னார்வலர்கள்
* மண்டல மருத்துவ அலுவலர் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. தினசரி 2000, 2500, 3000 பேருக்கு தொற்று என்ற நிலை மாறி, கடந்த சில நாட்களாக 1500க்கு சற்று ஏறக்குறைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஜூன் 6ம் தேதி நிலவரப்படி சென்னையில் 70 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 44 ஆயிரத்து 882 பேர் குணமடைந்துள்ளர். 24 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1082 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநலம் தொடர்பான ஆலோசனைகளை வழங்க சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் கொரோனா நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.   

அதன்படி, தற்போது வரை இந்த மையத்தில் 2.8 லட்சம் அழைப்புகள் கையாளப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து மண்டல வாரியாக உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை கொண்டு, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம் பெருங்குடி மண்டலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 100க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து, தாயர் நிலையில் உள்ளனர். இதுகுறித்து பெருங்குடி மண்டல மருத்துவ அலுவலர் வெங்கட்ராமன் கூறுகையில், ‘‘கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள், ஒருவித மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஆனாலும், அச்சத்துடன் பலர் காணப்படுகின்றனர்.

எனவே, கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களை வைத்து, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆலோசனை வழங்கினால் நன்றாக இருக்கும் என கருதி, அதனை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 100 பேரை தயார் செய்து வைத்துள்ளோம். இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களை தொடர்பு கொண்டு, தங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட முறை, நோய் தொற்றில் இருந்து தாங்கள் மீண்ட வர மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவார்கள். இந்த நடைமுறை பலருக்கு பலனளிக்கும்,’’ என்றார். இந்த பணியில் ஈடுபட்டு வரும் தகவல் தொழில்நுட்ப ஊழியர் வருண் கூறுகையில், “கொரோனா தொடர்பாக சமூக வலைதளம் மற்றும் பல்வேறு வழிகளில் எதிர்மறை தகவல் வருவதால் பலர் பயத்தில் உள்ளனர். அவர்களுக்கு நான் என்ன செய்தேன் என்று தெளிவாக தெரிவித்தேன். இதை தவிர்த்து எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் கொரோனா வந்த பிறகு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகிறேன்” என்றார்.

Tags : Infectious, healed, corona, person, psychiatric counseling
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...