×

கொரோனா பரவலில் சென்னையை விட மாவட்டங்களில் 2 மடங்கு பாதிப்பு: கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறல்; ஆய்வு செய்ய மத்திய குழு இன்று வருகை

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 3வது நாளாக பாதிப்பு குறைந்து, 1203 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மற்ற மாவட்டங்களில் சென்னையை விட 2 மடங்கு அதிகமாக 2,413 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வரும் நிலையில், பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழு இன்று சென்னை வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்ததால் ஜூன் மாதம் 17 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. சென்னையில் ஜூன் மாதம் தினசரி 2 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களாக சென்னையில் ஆயிரம் முதல் 1500 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

ஆனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர்த்து தென் மாவட்டங்களில் விருதுநகர், நெல்லை, தேனி, தூத்துக்குடி மற்றும் கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3616 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் சென்னையில் நேற்று 1203 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் சென்னையை விட 2 மடங்கு அதிகமாக, 2413 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நேற்று மட்டும் 35,423 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3616 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழகத்தில் வசித்தவர்கள் 3551 பேர். வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 65. அதிகபட்சமாக சென்னையில் 1203 பேர், மதுரையில் 334 பேர், விருதுநகரில் 253 பேர், திருவள்ளூரில் 217 பேர், நெல்லையில் 181 பேர், ராணிப்பேட்டையில் 125 பேர், தூத்துக்குடியில் 144 பேர், கன்னியாகுமரில் 119 பேர், வேலூரில் 117 பேர், காஞ்சிபுரத்தில் 106 பேர்  என 3616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2180 பேர் ஆண்கள். 1436 பேர் பெண்கள். தற்போது வரை 72,550 ஆண்கள், 46,022 பேர் பெண்கள், 22 திருநங்கைகள். நேற்று மட்டும் 4545 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 71,116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 45,839 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

நேற்று மட்டும் தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 45 பேர் என 65 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையைச் சேர்ந்தவர்கள் 39 பேர். செங்கல்பட்டு 8 பேர், மதுரை 8 பேர், திருவள்ளூர் 4 பேர், விருதுநகர், கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி தலா ஒருவர் என மொத்தம் 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 13 பேர் எந்தவித இணை நோய்களும் இல்லாமல் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1636 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தென் மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக கிராமங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தாவிடில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதையொட்டி மத்திய அரசு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய ஒரு சிறப்பு குழுவை தமிழகத்திற்கு இன்று அனுப்புகிறது. மத்திய கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய இணை செயலாளர் ராஜேந்திர ரத்னோ, இணை செயலாளர் சுபோத் யாடவா, டாக்டர் சுவரூப் சாகு, டாக்டர் சதீஷ் என 5 பேர் கொண்ட  குழுவினர் இன்று மாலை 5 மணிக்கு பெங்களூருவிலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகின்றனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்குகின்றனர்.

மத்திய குழுவினர் தமிழக முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள மருத்துவ குழுவினரோடும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது. இதுதவிர கொரோனா நோயாளிகள் அதிகமாக சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகாம்கள் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளதாகவும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மத்தியக்குழு தங்களது 3 நாட்கள் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வருகிற 10ம் தேதி தனி விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லி திரும்புவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

* சென்னையில் ஜூன் மாதம் தினசரி 2 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர்.
* கடந்த 3 நாட்களாக சென்னையில் பாதிப்பு 1500 பேருக்கும் குறைவாக உள்ளது.
* சென்னையில் நேற்று 1203 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
* மற்ற மாவட்டங்களில் சென்னையை விட 2 மடங்கு அதிகமாக, 2413 பேருக்கு தொற்று.
* தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு சிறப்பு குழு இன்று சென்னை வருகிறது.


Tags : districts ,spread ,Central Committee , Corona spread, Madras, districts, 2 times the impact, the officers stuttering; Study, Central Committee, Visit Today
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை