×

ஊரடங்கு காலத்தில் அத்துமீறும் நிதி நிறுவனங்கள்!: வங்கி கணக்கில் இருந்து அடாவடியாக கடன் வசூல்..வாடிக்கையாளர்கள் புகார்!!!

திருப்பூர்: ஊரடங்கு காலத்தில் ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி தனியார் நிதி நிறுவனம் வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக கடன் தொகையை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா பேரிடரால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் இருப்பதால் ஆகஸ்ட் மாதம் வரை வங்கிகள் கடன் தொகையை வசூலிக்க கூடாது என்பது ரிசர்வ் வங்கியின் உத்தரவு.

ஆனால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் தங்களிடம் பொருட்கள் வாங்கியவர்கள் வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பணத்தை எடுத்துள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, விளக்கம் கேட்டவர்களை நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளில் திட்டியதால் வாடிக்கையாளர்கள் அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சிலநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே திருப்பூரை அடுத்துள்ள தாராபுரத்தில் கடன் தொகையை கேட்டு மிரட்டுவதாக கூறி தனியார் நிதி நிறுவனத்தை 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கால் வருவாய் இழந்து தவிக்கும் நிலையில், கடன் தொகையை செலுத்தாவிட்டால் எந்த வங்கியிலும் கடன் பெற முடியாது என்று மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மிரட்டுவதாக தாராபுரத்தை சுற்றியுள்ள நெசவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் நிதி நிறுவனங்கள் அத்துமீறி நடப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Institutions ,Curfew ,Borrowers , Financial Institutions During Curfew!
× RELATED சிறுவனின் ஆன்லைன் விளையாட்டால் தாய் வங்கி கணக்கில் பணம் ‘அவுட்’