×

கோவையில் உள்ள கொடீசியா வணிக வளாகம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்!!!

கோவை:  கோவையில் உள்ள கொடீசியா வணிக வளாகம், தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பவர்கள் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 802ஆக உள்ளது. இதில் 275 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 525ஆக உள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, அந்தந்த மாவட்ட அதிகாரிகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக புதிதாக ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள கொடீசியா வணிக வளாகத்தில் 150 படுக்கைகள் முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு அதில், கொரோனா அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, மேலும் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளை கையாளுவதற்காக தனி மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கோவையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள கொடீசியா கொரோனா சிகிச்சை மையம் மக்களுக்கு அதிகளவில் பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள், போதிய வசதிகள் இல்லாதால் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொரோனா சிகிச்சை மையம் பயனளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Kodiyasia Shopping Complex ,Coimbatore ,Corona Treatment Center ,trade mall ,corona ward , coimbatore codissia trade mall became Corona ward
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு