புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த வழக்கு; மேலும் ஒருவர் கைது: தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

டெல்லி: புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு முகமை மேலும் ஒருவரை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படையை சேர்ந்த அடில் அகமது தார் நடத்திய இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு, இதற்கு பொறுப்பேற்றது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

இந்த தாக்குதலுக்கு மிக சக்திவாய்ந்த 25 கிலோ பிளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ் பயன்படுத்தப்பட்டது தடயவியல் ஆய்வில் தெரியவந்தது. இந்த தாக்குதலில் முக்கியக் குற்றவாளிகள் முடாசிர் அகமது கான், சஜித் பாத் ஆகியோர் கொல்லப்பட்டதால், என்ஐஏ இன்னும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இன்னும் இந்த விசாரணையில் பல்வேறு விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன. இந்த தாக்குதலில் யாரெல்லாம் ஈடுபட்டுபட்டது, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் எங்கு வாங்கப்பட்டது, யாரிடம் இருந்தது, வாகனத்தை எத்தனை பேர் ஓட்டிவந்தார்கள், வெடிபொருட்கள் எங்கு வாங்கப்பட்டன, பண உதவி எவ்வாறு கிடைத்தது என இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேசிய பாதுகாப்பு முகமை கைது செய்துள்ளது. பிலால் அகமது குச்சே என்பவர் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார், இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

Related Stories: