×

மேட்டூர் அணையிலிருந்து முதல்வரின் தொகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும்: சரபங்கா திட்டத்திற்கு தடை கோரி வழக்கு

மதுரை: காவிரி விவசாயிகள் சங்க செயலாளர் பி.ஆர்.பாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. சுமார் 18 லட்சம் ஏக்கரில் நெல், கரும்பு மற்றும் வாழை ஆகியவை பயிரிடப்படுகிறது. 2 கோடி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருப்பதோடு, 25 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி உள்ளது.

மைசூர் மாநிலம் மற்றும் டெல்டா பகுதி விவசாயத்திற்கான நீர் பங்கீடு தொடர்பாக கடந்த 1921ல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து நீர் பங்கீடு செய்யப்படுகிறது. இதனிடையே காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்தாண்டு நவ. 12ல் தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆயக்கட்டுகளான எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் மற்றும் மேட்டூர் தாலுகாவில் உள்ள 4,738 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் வகையில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் சரபங்கா நீர்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ரூ.565 கோடி செலவில், மேட்டூர் அணையின் இடது கரையில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று திப்பம்பட்டியில் ஏரி போல தேக்கி வைக்கவுள்ளனர். சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் அமையும் இந்த ஏரி, மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் தானாகவே நிரம்பிய பின், மேட்டூர் அணையின் 120 அடி நிரம்பும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அங்கிருந்து நீர் நிலைகளுக்கு தண்ணீர் திறக்கப்படும். அடுத்தாண்டிற்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர். இதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், இதர மாநில அரசுகள், தமிழக விவசாயிகள் என யாரிடமும் ஆலோசிக்கவில்லை. சட்டசபையிலும் விவாதிக்கவில்லை.

இந்த திட்டம் நிறைவேற்றினால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதி மற்றும் மாவட்ட மக்களுக்காக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளது. எனவே, ெடல்டா மாவட்ட விவசாயத்தை பாதுகாத்திடும் வகையில், புதிய திட்டத்திற்கான அரசாணைப்படி மேல் நடவடிக்ைககள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் நேற்று விசாரித்தனர். மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘உபரி நீரை கொண்டு செல்வதாகக் கூறி, அணைக்குள் இருந்து பம்பிங் மூலம் தண்ணீரை வெளியேற்றவுள்ளனர். முதல்வர் தனது ெதாகுதிக்காக நிபுணர் குழு ஆலோசனையின்றி திட்டத்ைத செயல்படுத்த உள்ளார்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக. 3க்கு தள்ளி வைத்தனர்.


Tags : Mettur Dam ,CM , Mettur Dam, Principal, block, Sarabanga Program
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!