×

50 ஆண்டுகளாக வற்றி கிடந்த அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி: பொதுமக்கள் மகிழ்ச்சி

தஞ்சை: தஞ்சை நகரில் 50 ஆண்டுகளாக வற்றி கிடந்த அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன், மக்களுக்கு பொற்கால ஆட்சி அளித்தார் என வரலாறு கூறுகிறது. தஞ்சை நகருக்கு வற்றாத நீர்த்தேவைக்காக நகர் முழுவதும் 50க்கும் மேற்பட்ட குளங்களை உருவாக்கினார். இதில் ஒரு சில குளங்களை தவிர கிட்டத்தட்ட அனைத்து குளங்களும் இன்று மறைந்து போய்விட்டது. குளங்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கு அந்தந்த பகுதி மக்களே களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள அழகி குளமும் ஒன்று. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம் காலப்போக்கில் புதர் மண்டியும், கருவேல மரங்கள் மண்டியும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி போனது. சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து இக்குளத்தின் வந்த நீர் பாதை தூர்ந்து போய் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் ராணி வாய்க்கால் மூலம் இக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இவ்வழிகள் எல்லாம் அடைப்பட்டு பெரிய பெரிய கட்டிடங்கள் உருவாகிவிட்டன. இதனால் கடந்த 50 ஆண்டுகளாக இந்த குளத்துக்கு நீர்வரத்து சுத்தமாக இல்லை. இந்நிலையில் குளத்துக்கு அருகில் உள்ள குடியிருப்புவாசிகளான பாம்பாட்டித்தெரு, கவாஸ்காரத்தெரு மக்கள் இணைந்து தூர்வாரி சுத்தம் செய்தனர்.

மேலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் குளத்தை சுற்றி பாதை அமைத்தும், அமருவதற்கு இருக்கைகள் அமைத்தும், குளத்தை சுற்றி மரக்கன்றுகளையும் நட்டனர். கடந்தாண்டு இக்குளத்துக்கு லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.
இந்த ஆண்டு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்து 1,400 அடி நீளத்துக்கு பிளாஸ்டிக் குழாய்களை புதைத்து குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு குளத்துக்கு தண்ணீர் வருவதை பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் கவாஸ்காரத் தெரு, பாம்பாட்டித்தெரு உட்பட சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Brunette pool, water fills, public
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...