×

மேட்டூர் அணை திறந்து 24 நாட்கள் ஆகியும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் வாய்க்கால்: 20 ஆயிரம் கனஅடி திறந்துவிட விவசாயிகள் வலியுறுத்தல்

* தண்ணீர் தட்டுப்பாட்டால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உடன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்த அனைத்து பகுதிக்கும் தட்டுப்பாடு இல்லாமல் போதிய அளவு தண்ணீரை முறை வைக்காமல் மேட்டூர் அணையில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும்

கீழ்வேளூர்: மேட்டூர் திறந்து 24 நாட்கள் ஆகியும் தண்ணீர் இல்லாமல் வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்ய மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 28ம் தேதி மூடப்படும். இந்த கால கட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு பின்னர் கல்லணை திறக்கப்பட்டது. பெரும்பான்மையான ஆறு வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கால தாமதமாக தண்ணீர் குறைந்த அளவே வருவதால் குறுவை சாகுபடி தொடக்கத்திலேயே விவசாயிகள் சோதனையை சந்தித்துள்ளனர்.

நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நெல் விதைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் முளைத்தால் தான் அடுத்து தாளடியும் அதை தொடர்ந்து உளுந்து, பயறு பயிர்கள் சாகுபடி செய்யலாம். பெரும்பான்மையான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். இதனால் மழைக்காகவும், மேட்டூர் அணை தண்ணீருக்காவும் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு 24 நாட்கள் ஆகிய நிலையில் நாகை மாவட்டதில் பெரும்பாலான ஆறுகளில் தண்ணீர் குறைந்த அளவில் செல்கிறது. இதனால் ஆறுகளில் இருந்து தண்ணீர் வாய்க்கல்களில் ஏறி செல்லும் அளவிற்கு இல்லாததால் வாய்க்கால்களில் வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை நேரடி நெல் விதைப்பு செய்த நெல்விதைகள் முளைக்க போதுமானதாக இல்லாததால் முளைப்பு திறன் பாதிக்கபடும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வயல்களில் உள்ள நெல் விதைகளை மயில், புறா, எலி போன்றவைகள் தின்றுவிடுவதாலும் நெல் விதை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது குறுவை சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள், விதையை முளைக்க வைக்கவும், நடவு செய்யும், நிலத்தை சேறாக்காவும் ஒரே நேரத்தில் தண்ணீர் அதிகமாக தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூன்.12ம் தேதி தண்ணீர் திறக்கபட்டுள்ளதை கருத்தி கொண்டு குறுவை சாகுபடி பணியை தொடங்கியுள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உடன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்த அனைத்து பகுதிக்கும் தட்டுப்பாடு இல்லாமல் போதிய அளவு தண்ணீரை முறை வைக்காமல் மேட்டூர் அணையில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகளும், விவசாய சங்கங்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : opening ,Mettur Dam , Mettur Dam, 24 days, farmers
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு