×

30 ஆண்டுக்கு பின் கிராமத்திற்கு வந்த காவிரி நீர்: அரசுடன் இணைந்து பொதுமக்கள் சாதனை

மயிலாடுதுறை: மயிலாடுதுறைஅருகே கோவாஞ்சேரி வாய்க்கால் தூர்வாராமல் உள்ளதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் வாய்க்கால் தூர்வாரப்பட்டு இதில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. மயிலாடுதுறை அருகே உள்ளது கோவாஞ்சேரி கிராமம். இந்த கிராமத்தில் 325 ஏக்கர் விவசாய நிலத்திற்கு காவிரிநீர் 5 கி.மீ தூரத்தில் உள்ள வீரசோழனாற்றிலிருந்து, கோவாஞ்சேரி வாய்க்கால் மூலம் கிடைத்து வந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாய்க்காலை ஊர் மக்களே தூர்வாரி வந்தனர். 1000 குடும்பங்களை கொண்ட ஏரலாஞ்சேரி, கோவாஞ்சேரி கிராமத்தில் உள்ள 18 குளங்களும் நிரம்பி நிலத்தடிநீர் 30 அடியில் கிடைத்தது.

கடந்த 30 ஆண்டுகளாக கோவாஞ்சேரி வாய்க்காலில் காவிரிநீர் வராததால் நிலத்தடி நீர்மட்டம் 200அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. 10 அடி அகலத்திலிருந்த அந்த வாய்க்கால் தற்பொழுது 2 அடி முதல் 3 அடியாக சுருங்கிவிட்டது, இரண்டு ஊருக்கும் குடிநீர் ஆழ்துளை கிணறு தான், அரசு போடும் மினிபவர் பம்ப்பும் வேலை செய்வதில்லை. நிலத்தடிநீர் காலப்போக்கில் உப்பு நீராகிவிட்டது. கோவாஞ்சேரி வாய்க்காலை தூர்வாரினால் மட்டுமே ஒட்டுமொத்த கிராமத்திற்கும் நன்மை என்பதால் கிராம மக்கள் தொடர்ந்து அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியும் எந்த பலனும் இல்லை. பக்கத்து ஊருக்கு செல்லும் வாய்க்கால் தூர் வாரப்படுகிறது, ஆனால் கோவாஞ்சேரி வாய்க்கால் மட்டும் தூர்வாரப்படுவது இல்லை.

பல இடங்களில் கோவாஞ்சேரி வாய்க்காலும் தூர்ந்துபோய் பொதுப்பணித்துறையிடமிருந்து காணாமல் போய்விட்டது. வாய்க்காலை மீட்டு தூர்வாரி அதில் காவிரி நீரை விட வேண்டும், அப்படி செய்யாதபட்சத்தில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதும் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று ஊர்மக்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியாகியிருந்தது. உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு கோவாஞ்சேரி வாய்க்கால் தூர்வாரப்படும் என்று கூறி பொக்லேன் இயந்திரம் அளித்தனர். அதை வைத்துக்கொண்டு, பொதுமக்கள் ஆளாளுக்கு செலவு செய்து 3 கி.மீ தூரத்திற்கு ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரினர். இதனால் 30 ஆண்டுகளாக காவிரி நீரை காணாத கோவஞ்சேரி கிராம குளத்திற்கு தண்ணீர் வந்தது. தினகரன் செய்தி எதிரொலியால். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : village ,Cauvery , Cauvery Water, Government, Public
× RELATED விழுப்புரம் தென்பாலை கிராமத்தில்...