×

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காய்கறிகளை இறக்க மாநகராட்சி அனுமதி மறுப்பால் பரபரப்பு: பஸ்கள் இயங்கும் வரை தற்காலிக அனுமதி

நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நடந்து வரும் மொத்த மார்க்ெகட்டில் காய்கறிகளை இறக்க மாநகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெல்லை டவுன் நயினார்குளம்  மொத்த காய்கறி சந்தை, கடந்த 2 மாதங்களுக்கு முன் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 1ம் தேதி முதல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பிளாட்பாரங்களில் காய்கறி மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்ததாலும், லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகளும், வியாபாரிகளும், போக்குவரத்து துறை ஊழியர்களும் சிரமத்தோடு நடமாடினர்.

இந்நிலையில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி சந்தையை நிர்வாக காரணங்களுக்காக பாளை. ஜான்ஸ் பள்ளி மைதானத்திற்கு மாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அங்கு செல்ல தங்களுக்கு உள்ள சிரமங்களை எடுத்துக்கூறி வியாபாரிகள் தொடர்ந்து நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு திடீரென காய்கறிகளை இறக்குவதற்கு தடை விதித்தனர். வந்து நின்ற லாரிகளில் இருந்து காய்கறிகளை இறக்கக் கூடாது என பஸ் நிலைய செக்யூரிட்டிகள் தெரிவித்தனர். வியாபாரிகள் அங்கிருந்து காலி செய்து ஜான்ஸ் பள்ளி மைதானம் அல்லது ஆம்னி பஸ் நிலையத்திற்கு செல்ல கேட்டுக் கொண்டனர்.

இதனால் வியாபாரிகள் செய்வதறியாது திகைத்தனர். புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்று நெல்ைல மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவிடம் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் இதுகுறித்து போன் மூலம் பேசினர். பின்னர் பிற்பகலில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கம் தொடங்கும் வரை அங்கு காய்கறி மார்க்கெட்டை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதற்குள் மாற்று இடங்களுக்குள் செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Tags : council ,Municipal ,bus stand , Paddy New Bus Station, Vegetables
× RELATED ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம்