மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் முதன்முறையாக ஜீரோ பாதிப்பு பதிவு!

பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், முதன்முறையாக ஜீரோ பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் இன்று உலகம் சந்தித்துவரும் மோசமான நிலைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது சீனாதான். கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஹூபே மாகாணத் தலைநகரான வுஹானில் இருக்கும் ஒரு இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா பரவியதாகக் கூறப்பட்டது. அதன்பிறகு, மொத்த ஹூபே மாகாணமும் முடக்கப்பட்டு, அங்கு மக்கள் நடமாடக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஹூபேவை தவிர சீனாவின் பிற இடங்களில் வைரஸ் பரவல் பெரிதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 3 மாத போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கில் முழுத் தளர்வு அறிவிக்கப்பட்டது.

சீன மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. பெய்ஜிங்கின் ஜின்ஃபாடி சந்தையை மையமாக கொண்டு கடந்த மாதம் முதல் கொத்து கொத்தாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. அந்த வகையில் 335 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நகரம் முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் விரிவுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பெய்ஜிங்கில் முதன்முறையாக ஜீரோ பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய  அதிகாரிகள், நகர மக்கள் தொகையில் பாதி அதாவது ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், இன்று அறிகுறியற்ற ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் இது உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் சேர்க்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: