×

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: மதிமுக கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் வருமாறு: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய தமிழக அரசு, இக்கொடூர படுகொலையை மூடி மறைத்திட முனைந்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தக்க நேரத்தில் தலையிட்டு, நீதியை நிலைநாட்ட உறுதியுடன் உத்தரவுகளைப் பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வழிகாட்டுதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலைக்கு உரிய நீதி நிலை நாட்டப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. நீதிமன்றத்தின் துரித நடவடிக்கைகளுக்கு மதிமுக வரவேற்கிறது. இப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். கொரோனா தொற்றுப் பரிசோதனைக்கான பி.சி.ஆர். கருவிகள் தமிழக அரசின் அறிவிப்பின்படி, தற்போது கையிருப்பில் உள்ள 5 லட்சம் கருவிகள் போதுமானவை அல்ல.

தொற்றைப் பரவலாகக் கட்டுப்படுத்த தமிழக அரசு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். ரயில்வேத்துறை தனியார் மயமானால், ரயில்வே பயணக் கட்டணங்கள் தனியார் நிறுவனங்களின் விருப்பப்படி தாறுமாறாக பல மடங்கு உயரும். எனவே ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களைப் புகுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். விளைநிலங்களைப் பாழ்படுத்தும் ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Tags : traders ,Sathankulam , Satanic Merchants, Murder, Criminal, Severe Punishment, Intellectual Meeting, Resolution
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...