×

தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏதுவாக டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தொடக்கம்: உயர் அதிகாரி தகவல்

சென்னை: மோசடி மற்றும் கொள்ளை சம்பவங்களை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏதுவாக டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுவரை துளையிட்டு பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால், டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கடைகள் மற்றும் பாதுகாப்பற்றபகுதிகளில் உள்ள கடைகளின் விவரத்தை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் தலைமை அலுவலகம் உத்தரவிட்டது.இந்த உத்தரவையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பாதுகாப்பற்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்தது. பின்னர் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களில் உள்ள 3,000 கடைகள் பாதுகாப்பற்ற கடைகளாக கண்டறியப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் 535 கடைகள், கோவை மண்டலத்தில் 450 கடைகள், மதுரை மண்டலத்தில் 755 கடைகள், சேலம் மண்டலத்தில் 565 கடைகள், திருச்சி மண்டலத்தில் 695 கடைகள் பாதுகாப்பற்ற மற்றும் ஏற்கனவே கொள்ளை நடந்த கடைகள் என கண்டறியப்பட்டன. இந்நிலையில், இந்த கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைக்கும் தலா 2 கேமராக்கள் வீதம் மொத்தம் 6
ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். கடைக்கு வெளியே ஒரு கேமராவும், உள்ளே ஒரு கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். கண்காணிப்பு கேமரா சர்வர் அனைத்தும் அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகம்,முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கான, சோதனை பணி முடிவடைந்துள்ளது. எனவே, குறிப்பிட்ட கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளை விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், ஒரு மாதத்திற்குள் இப்பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags : CCTV ,Headquarters ,Head Office Headquarters , Head Office, Track, Task Shop, CCTV Camera, Fitting Works, High Officer Information
× RELATED சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம்