×

பழைய கட்டண அடிப்படையில்தான் மின் கட்டணம் வசூலிக்கப்படும்: யூனிட் அடிப்படையில் கணக்கிடப்படாது என ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: மின்சார சட்ட விதிகளின்படி, ஊரடங்கு காலத்தின்போது, முந்தைய கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீதி யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மின் வாரியம் மேற்கொள்ளும் மின் கட்டண கணக்கீடுப்படி, பொதுமக்கள் கூடுதல் தொகை செலுத்த நிர்பந்திக்கப்படுவதாக கூறி, அதற்கான விளக்க மனு ஒன்று மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மின்சார சட்ட விதிகளின்படி, ஊரடங்கு காலத்தின்போது, முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுமே தவிர ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததால், மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். இதையடுத்து தமிழக அரசு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Old tariff base, electric charge, unit basis not calculated, iCord, Tamil Nadu Government Information
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...