×

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் ரத்து: பழையபடி பாடங்களே வருகிறது

சென்னை: தமிழகத்தில் மேனிலைக் கல்வியில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து வெளியான அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் மேனிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் இரண்டு மொழிப்பாடங்கள், பகுதி 3ல் குறிப்பிட்ட பாடத்தொகுதியை எடுத்து படிக்கும் வகையில் பாடத்திட்டம் இருந்தது. இதன்படி 6 பாடங்களை படித்து தேர்வு எழுத வேண்டும். இதற்கு மொத்தம் 1200 மதிப்பெண்கள். கடந்த ஆண்டில் இருந்து 500 மதிப்பெண் என்று வைத்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டில் 4 பாடங்கள் கொண்ட தொகுதி அல்லது 3 பாடங்கள் கொண்ட தொகுதி ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்று தேர்வு செய்து கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்தனர். இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்து, அரசு நேற்று ஆணையிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணை:
மேனிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தை போக்கும் வகையில் வேலைவாய்ப்புக்கு ஏற்றதாக பாடத் தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி ஏற்கனவே நடைமுறையில் இருந்த 4 பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகள் கொண்ட 3 பாட தொகுப்பு கொண்டு வரப்பட்டது. இதன்படி 4 அல்லது 3 பாடத் தொகுப்புகளை மாணவர்கள் 2020-21ம் கல்வி ஆண்டில் விருப்பமாக எடுத்து படிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 3 பாடங்கள் கொண்ட தொகுப்பை மாணவர்கள் தேர்வு செய்து படித்தால் அவர்களின் உயர்கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும். அதனால் ஏற்கனவே இருந்த 4 பாடங்கள் கொண்ட தொகுப்பையே வைக்க வேண்டும் என்று பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் சுட்டிக்காட்டி அரசுக்கு கடிதம் எழுதினார். மேலும் புதியதாக அறிமுகம் செய்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டு இருந்தார். பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவையும் ஏற்று மேனிலைக் கல்வி பாடத்திட்டத்தில் 3 முதன்மை பாடங்களை மட்டும் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்து, 2020-21ம் கல்வி ஆண்டில் இருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 முதன்மைப் பாடங்களை கொண்ட பாடத்திட்டத்தை மட்டும் அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த அரசு ஆணையிடுகிறது.

Tags : Plus 1, Plus 2, New Syllabus, Cancellation, Old Courses
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...