×

சென்னை உட்பட 7 முக்கிய நகரங்களில் அலுவலக குத்தகை 36 சதவீதம் சரிந்தது: கட்டிட உரிமையாளர்கள் திண்டாட்டம்

புதுடெல்லி: சென்னை உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் கடந்த 6 மாதங்களில் அலுவலகங்களுக்கு குத்தகை விடுவது 36 சதவீதம்குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச்சில் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது. இதன் காரணமாக அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் முடங்கின. தனியார் நிறுவனங்கள் திக்குமுக்காடி போயின. ஐடி நிறுவனங்களும் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கின்றன. பொது போக்குவரத்தும் இல்லாத நிலையில் ஊழியர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளுமே கொரோனா எதிரொலியாக சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில், அலுவலகங்கள். வணிக நிறுவனங்கள் போன்றவற்றுக்கு இடங்களை குத்தகைக்கு எடுப்பதும் வெகுவாக குறைந்துள்ளது.  

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் நகரங்களில் அலுவலக இடத்தை குத்தகைக்கு விடுவது 36 சதவீதம் சரிவை கண்டுள்ளது, நாட்டில் உள்ள 7 முக்கிய நகரங்களில் மொத்தம் 1.67 கோடி சதுர அடி இடம் மட்டுமே வாடகை அல்லது குத்தகைக்கு நிறுவனங்கள் எடுத்துள்ளன. பெங்களூருவில் 2020ம் ஆண்டு முதல் அரையாண்டில் 33 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 54 லட்சம் சதுர அடி இடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் 62 சதவீதமும், டெல்லி, என்சிஆர் மார்க்கெட் 27 சதவீதமும் குறைந்துள்ளது.

சென்னையில் அலுவலக இடங்கள் குத்தகைக்கு விடுதல் 34 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், மும்பையில் 53 சதவீதம் குறைந்துள்ளது. கொல்கத்தாவிலும் குறைந்து காணப்படுகிறது. இதனால், வாடகை வருமானத்தை நம்பி கட்டப்பட்டுள்ள ஏராளமான கட்டிங்கள் காலியாக இருக்கின்றன. வங்கிகளில் கடன்களை வாங்கி இவற்றை கட்டியுள்ள உரிமையாளர்கள், கடன் தவணையை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். எதிர்காலத்தில் தங்களின் கட்டிடங்கள் வாடகை எடுக்கப்பட்டாலும், கொரோனாவுக்கு முன்பிருந்தது போன்ற கிராக்கியோ அல்லது கேட்ட வாடகை, குத்தகை தொகையோ கிடைக்காது என்கின்றனர் இவர்கள்.

* புனேயில் மட்டும் கிராக்கி
நாட்டிலேயே கொரோனாவின் கோரத்தாண்டவம், மகாராஷ்டிராவில்தான் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, வர்த்தக நகரமான மும்பையில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதனால், இந்த நகரில் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுப்பது 53 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், புனேவில் மட்டும் தேவை 18 சதவீதம் அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Tags : cities ,Building owners ,Chennai , Chennai, 7 major cities, office leases, fell 36 percent
× RELATED இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா...