×

பாவேந்தர் பாரதிதாசன் மகன் காலமானார்

புதுச்சேரி: பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் புதுச்சேரியில் நேற்று காலமானார். பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகன் மன்னர்மன்னன் (எ) கோபதி (92), புதுச்சேரி காந்தி நகரில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மன்னர்மன்னன், புதுச்சேரி காந்தி நகரில் உள்ள தனது வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 2.40 மணியளவில் இறந்தார். இவரது மனைவி சாவித்திரி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும், அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர். இவரது உடல் அடக்கம் புதுச்சேரியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

முதுபெரும் தமிழறிஞரும், விடுதலை போராட்ட வீரருமான மன்னர்மன்னன், 50 நூல்கள் எழுதியுள்ளார். புதுவை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். தந்தை பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளிட்டார். காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் நெருங்கி பழகியுள்ளார்.

மு.க. ஸ்டாலின் இரங்கல்: மன்னர் மன்னன் மறைவிற்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞருமான கலைமாமணி மன்னர் மன்னன் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தியறிந்து சொல்லொணாத் துயரமுற்றேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மன்னர்மன்னன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Tags : Pavender Bharathidasan , Pavender Bharathidasan, son, passed away
× RELATED பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகன் மன்னர் மன்னன் புதுச்சேரியில் காலமானார்