×

சென்னையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்ந்துள்ளது: அமைச்சர் காமராஜ் தகவல்

சென்னை: சென்னையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார். உணவு துறை அமைச்சர் காமராஜ் நேற்று சென்னையில், கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மண்டல பகுதிகளில் நடைபெற்ற வரும் மருத்துவ முகாம்களை நேரில் ஆய்வு செய்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிச் செல்கின்ற நிலை உருவாகியுள்ளது. இதுவரை சென்னை மாநகராட்சியில் 12,712 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 8,20,358 பேர் பயனடைந்துள்ளனர்.

அதில் 38,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான், பாதிக்கப்பட்டவர்களின் 62 சதவீதம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி சென்றிருக்கிறார்கள். எங்களை போன்ற அமைச்சர்களை சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஓருங்கிணைந்து 15 மாநகராட்சி மண்டலங்களில் மூன்று மண்டலங்களுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் கொரோனா தடுப்பு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மாநகராட்சியில் தொற்று எண்ணிக்கை குறைந்துக் கொண்டு இருக்கிறது. உதாரணமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 14 நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட தெருக்கள் 2,414 ஆகும். இதில் தற்போது 990 தெருக்கள் பாதிப்பே இல்லாமல் இருக்கிறது. ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kamaraj ,persons ,Chennai , Chennai, Healed, Home, 62%, Increase, Minister Kamaraj, Information
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...