×

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சென்னை ஆயுதப்படை காவலர் பலி: மாநகரில் இறந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது

சென்னை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை அடுத்த அம்மாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் நாகராஜன் (32). இவர், கடந்த 2013ம் ஆண்டு தமிழக காவல் துறையில் காவலராக பணிக்கு சேர்ந்தவர். பின்னர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்த நாகராஜன். பிறகு அயல் பணியாக வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர், தற்போது சென்னை பிராட்வே 9வது கொண்டி செட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பல நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதனால் கடந்த 3ம் தேதி காய்ச்சல் காரணமாக பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதில் நாகராஜனுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. உடனே அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நாகராஜன் மூன்றாது நாளான நேற்று அதிகாலை 3.45 மணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நாகராஜன் தொற்று காரணமாக 3 நாட்களில் உயிரிழந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவலர் நாகராஜன் உயிரிழந்த சம்பவம் குறித்து மதுரையில் உள்ள அவரது பெற்றோருக்கு உயர் அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17ம் தேதி மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுரளி, கடந்த 1ம் தேதி பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு எஸ்ஐ மணிமாறன் (57) ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையல் தற்போது மூன்றாவதாக ஆயுதப்படை காவலர் நாகராஜன் இறந்துள்ளது மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் இரங்கல்: கொரோனாவால் காவலர்  நாகராஜன் மரணம் அடைந்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : Security Guard ,Madras Armed Forces Guard ,Madras , Coronavirus, Chennai Armed Forces Guard killed, death toll rises to 3
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு