×

அவசரப்பட்டால் ஆபத்தில்தான் முடியும் ஆக.15க்குள் தடுப்பூசி இலக்கு சாத்தியமற்றது: இந்திய அறிவியல் கழகம் திட்டவட்டம்

புதுடெல்லி: ‘ சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி வெளியிடப்படும்,’ என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இலக்கு சாத்தியமற்றது,’ என்று இந்திய அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கோரத்தாண்டவமாடி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக, ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்தை, ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்து இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி் கழகம் (ஐசிஎம்ஆர்) சமீபத்தில் அறிவித்தது. இது, விலங்குகளுக்கு அளி்த்து செய்யப்பட்ட பரிசோதனையில் வெற்றி கிடைத்திருப்பதால், ஜூலை7 முதல் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படும் என்றும், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அது அறிவித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய அறிவியல் கழகம்  நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
அறிவியல் ஆராய்ச்சிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நிர்வாக ஒப்புதல்களை வேண்டுமானால் உடனடியாக பெற முடியும். ஆனால், அறிவியல் பரிசோதனை முறைகள், அதன் மூலம் பெறப்படும் தகவல் சேகரிப்பு ஆகியவை அதற்குரிய குறிப்பிட்ட கால நேரங்களில் மட்டுமே நடைபெறும். அதில் சமரசம் செய்து கொண்டு அதனை விரைவுபடுத்த முடியாது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் பங்கேற்றுள்ள விஞ்ஞானிகளின் அமைப்பான இந்தியஅறிவியல் கழகத்தின்  கூற்றுப்படி, ஐசிஎம்ஆர் நிர்ணயித்துள்ள கால கெடுவுக்குள் தடுப்பூசி வெளியிடுவது என்பது சாத்தியமற்றது. முதல் கட்ட ஆய்வில் கிடைக்கும் தகவல்கள் முழுவதும் அடுத்த கட்ட ஆய்வுக்கு முன் ஆய்வு செய்யப்படும். இதில் ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் பரிசோதனைகள் உடனடியாக ரத்து செய்யப்படும். கடுமையான அறிவியல் செயல் முறைகள், தரநிலைகளில் சமரசம் செய்து கொண்டு எடுக்கப்படும் எந்தவொரு அவசர முடிவும், மக்கள் மீது எதிர்பாராத, நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்திய அறிவியல் கழகம் நம்புகிறது.

Tags : Indian Institute of Science Scheme , By Aug. 15, vaccine targeted, unlikely, Indian Institute of Science, Project
× RELATED ஆந்திராவில் நட்சத்திர ஓட்டலில்...